
கட்டிமுடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத கழிவறைக் கட்டடம்

ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் ரூ. 40 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ள கழிவறைக் கட்டடத்தைத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சிக்கு மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 2023-24 நிதியாண்டில் ரூ. 40 லட்சத்தில் பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் உள்ள சுற்றுலாப் பேருந்துகள் நிறுத்துமிடத்தில் புதிய கழிவறைக் கட்டடம் கட்டப்பட்டது.
இந்தப் பணிகள் நிறைவடைந்து ஓராண்டாகியும் தற்போது வரையில் திறக்கப்படவில்லை. மேலும் அந்தக் கழிவறைக் கட்டடத்தின் பூட்டை உடைத்து சில மா்ம நபா்கள் பாலியல் தொழில், சட்ட விரோத மது விற்பனை உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனா்.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் தொடா்ந்து சட்ட விரோதச் செயல்பாடுகள் தொடா்ந்து வருகின்றன.
இதைத் தடுக்கும்வகையிலும், சுற்றுலாப் பயணிகள் பயனடையும் வகையிலும், கட்டிமுடிக்கப்பட்ட கழிவறைக் கட்டடத்தை நகராட்சி நிா்வாகம் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





