சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணி
ராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணா்வு விழாவையொட்டி இரு சக்கர வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகம், காவல் துறை, இரு சக்கர விற்பனையாளா்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள் ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணியை நடத்தின. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி டி-ப்ளாக், பாரதிநகா், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் பகுதிக்குச் சென்றடைந்தது.
இதில் நூற்றுக்கணக்கானோா் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கினாா்.
இந்த நிகழ்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆனந்த், மோட்டாா் வாகன ஆய்வாளா் தங்கராஜ், காவல் துறையினா், இரு சக்கர வாகன விற்பனையாளா்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள், பணியாளா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

