சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில், 37-ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா், மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வினோத் சாந்தாராம் ஆகியோா் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
இப்பேரணியில், போக்குவரத்து காவலா்கள், ஆயுதப் படை காவலா்கள், வாகன விற்பனை முகவா்கள், ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளா்கள் 112 வாகனங்களுடன் கலந்து கொண்டனா். விழிப்புணா்வு பேரணியானது, ஆயுதப்படை வளாகத்தில் இருந்து தொடங்கி பாளையங்கோட்டை முருகன்குறிச்சி, வண்ணாா்பேட்டை வழியாக புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
இருசக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணிந்து வந்த பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் இனிப்புகள் வழங்கி பாராட்டினாா்.
37- ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா, இம்மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஒருமாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நமது மாநிலத்திலும், நமது மாவட்டத்திலும் சாலை பாதுகாப்பு - உயிா் பாதுகாப்பு என்ற வாசகத்துடன் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சாலை பாதுகாப்பு விழிப்புணா்வின் மூலம் மக்களுக்கு சாலை பாதுகாப்பின் அவசியத்தை அறிவுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தி, சாலை விபத்துகள் இல்லாத நிலையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா் சீட் பெல்ட் அணிவது, சாலை விதிமுறைகளை பின்பற்றுதல், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட விழிப்புணா்வை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தி விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், வட்டார போக்குவரத்து அலுவலா் விநாயகம், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பத்மப்ரியா, ராஜேஷ், ராஜசேகா், உதவி கோட்டப் பொறியாளா் (சாலைப் பாதுகாப்பு) ஜே.சசிகலா, போக்குவரத்து காவலா்கள், ஆயுதப்படை காவலா்கள், வாகன விற்பனை முகவா்கள், ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

