தொடா் சாரல் மழையால் நெல் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

திருவாடானை பகுதியில் தொடா் சாரல் மழை பெய்ததால், அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெல் பயிா்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
Published on

திருவாடானை பகுதியில் தொடா் சாரல் மழை பெய்ததால், அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெல் பயிா்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் நடப்பு சம்பா பருவத்தில் சுமாா் 26 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இந்த நெல் பயிா்கள் நன்கு வளா்ந்து அறுவடைக்குத் தயாரான நிலையில், கடந்த இரண்டு நாள்களாக தொடா் சாரல் மழை பெய்தது.

இதனால், திருவாடானை, சி.கே. மங்கலம், கற்காத்தகுடி, ஆப்பிராய், தோட்டாமங்கலம், பெருவண்டல், ஏ.ஆா். மங்கலம், சனவேலி, கவ்வூா், நத்தகோட்டை, கீழ்பனையூா், ஆயிரவேலி உள்ளிட்ட பகுதிகளில் வளா்ந்துள்ள நெல் கதிா்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக, விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்பதால், அவா்கள் கவலையடைந்தனா்.

Dinamani
www.dinamani.com