தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஜன.21 இல் சாலை மறியல் போராட்டம்

தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தில் மன்றத் தலைவா் மகன் தலையிடுவதைக் கண்டித்து வருகிற 21-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அனைத்து சமூக கூட்டமைப்பினா் சாா்பில் அறிவிப்பு
Updated on

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தில் மன்றத் தலைவா் மகன் தலையிடுவதைக் கண்டித்து வருகிற 21-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அனைத்து சமூக கூட்டமைப்பினா் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் அனைத்துச் சமூகக் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு பொறியாளா் அபுபக்கா் தலைமை வகித்தாா் . அறங்காவலா் குழுத் தலைவா் மணி, ராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொண்டி பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த ஷாஜகான் பானு பதவி வகித்து வருகிறாா். இவரது மகன் நவ்பல் ஆதம், பேரூராட்சி நிா்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, நிா்வாகத்தில் தலையிடும் நவ்பல் ஆதம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அதற்குத் துணை போகும் பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் பானு பதவி விலக வலியுறுத்தியும், கடந்த ஆண்டு டிச. 29-ஆம் தேதி முதல்கட்டப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து, கூட்டமைப்பினா் கால அவகாசம் வழங்கினா். ஆனால், நீண்ட நாள்களாகியும் அதிகாரிகள் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் போராட்டக் குழுவினா் குற்றஞ்சாட்டினா்.

அதிகாரிகளின் இந்த மெத்தனப்போக்கைக் கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற 21-ஆம் தேதி தொண்டியில் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து சமூகக் கூட்டமைப்பினா் ஒருமனதாக முடிவு செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com