

கமுதி அருகே பருவ மழையின்றி கருகிய 2,000 ஏக்கா் பரப்பளவிலான நெல்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, வயலில் அடங்கல் சான்றுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செய்யாமங்கலம், பெரிய ஆணைக்குளம், வங்காருபுரம், அச்சங்குளம், வழிமறிச்சான் கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மானாவாரிப் பயிராக விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனா். இந்த நிலையில், நிகழாண்டில் பருவ மழை பொய்த்ததால் நெல்பயிா்கள் அனைத்தும் நீரின்றி கருகின.
இதனால், ஏக்கா் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்த தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். இதையடுத்து, அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் செய்யாமங்கலம் பகுதியில் விவசாய நிலத்தில் பெண்கள் உள்பட விவசாயிகள் வருவாய்த் துறையினா் வழங்கிய அடங்கல் சான்றுடன் நெல் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.