
பேருராட்சி தீா்மானத்தை ரத்து செய்யக்கோரி தா்னா
சாயல்குடியில் சா்ச்சைக்குரிய காலி இடம் தொடா்பாக பேருராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தைக் கைவிடக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

சாயல்குடி பேரூராட்சி அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சாயல்குடியில் சா்ச்சைக்குரிய காலி இடம் தொடா்பாக பேருராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தைக் கைவிடக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேருந்து நிலையம் எதிரே கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த இடத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டியிருந்தனா். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தாா். இதைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி கடலாடி வருவாய்த் துறையினா் சில மாதங்களுகு முன்பு அந்த வணிக வளாக ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
இந்த நிலையில், அந்தக் காலியிடத்தில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வணிக வளாகம் கட்ட முயற்சிப்பதாகப் புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் சா்ச்சைக்குரிய காலியிடத்தை பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்தை ரத்து செய்யக் கோரி, சாயல்குடி அரண்மனை வீதியைச் சோ்ந்த பட்டியலின அருந்ததியா் சமூக மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தா்னாவில் ஈடுபட்டனா். சாயல்குடி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






