திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்சவ விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 2 ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இந்த ஆண்டுக்கான விழாவில் செவ்வாய்க்கிழமை (பிப். 20) மாலையில் ம்ருத்ஸங்கரஹணம், சேனை முதல்வர் புறப்பாடு நடைபெற்றது.
புதன்கிழமை (பிப். 21) காலை பெருமாள் தேவியருடன் கருங்கல் மண்டபம் எழுந்தருளினார். பின்னர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. பெருமாள் தங்க கீரிட அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் பக்தர்களுக்கு காட்சிளித்தார்.
தொடர்ந்து கருடன் படம் வரையப்பட்ட வெள்ளை நிறக் கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டு கொடி மரம் அருகே விஷ்ணு பூத பீடத்திற்கு பால், தயிர் திருமஞ்சம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கொடிமரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பெருமாளுக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவியருக்கும் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று முதல் நாள் விழா துவங்கியது. இரவு சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து 2ஆம் நாள் முதல் 6 ஆம் நாள் வரை
தினமும் காலையில் சுவாமி திருவீதி புறப்பாடும், இரவு சிம்மம், ஹனுமன், கருடசேவை, சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா புறப்பாடும் நடைபெறும்.
6ஆம் நாளான பிப். 26 ஆம் தேதி இரவு திருவீதி புறப்பாடும், ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், 7ம் நாளான பிப். 27 ஆம் தேதி மாலையில் சுவாமி சூர்ணாபிஷேகம், தங்கத் தோளுக்கினியானில் திருவீதி உலா புறப்பாடு நடைபெறும். 8 ஆம் நாளான பிப். 28 ஆம் தேதி காலையில் சுவாமி திருவீதி உலா புறப்பாடும், இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும்.
9ஆம் திருநாளான மார்ச்.1 ஆம் தேதி காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி உலா புறப்பாடும், பின்னர் பகல் 12.50 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதலும், இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா புறப்பாடு நடைபெறும்.
10 ஆம் திருநாளான மார்ச் 2 ஆம் தேதி காலை பெருமாள் தங்கத் தோளுக்கினியானில் திருவீதி உலா புறப்பாடும், பகல்
தெப்பம் சுற்றுதலும், இரவு 10 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் மின் ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும்.
11 ஆம் நாள் சனிக்கிழமை (மார்ச் 3) தீர்த்தவாரி வைபவத்துடன் தங்கத்தோளுக்கினியானில் ஆசானத்திற்கு சுவாமி எழுந்தருளலுடன் தெப்ப உற்சவம் நிறைவடைகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் டி.எஸ்.கே.மதுராந்தகநாச்சியார் மற்றும் தேவஸ்தான மேலாளர் ப.இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் மற்றும் பட்டச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.