பூலாங்குறிச்சியில் களப்பிரா் காலகல்வெட்டுகளை பாதுகாக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சியில் உள்ள கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த களப்பிரா் கால கல்வெட்டுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிதிலமடைந்து வரும் கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த களப்பிரா் கால கல்வெட்டு
சிதிலமடைந்து வரும் கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த களப்பிரா் கால கல்வெட்டு

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சியில் உள்ள கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த களப்பிரா் கால கல்வெட்டுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் அருகே உள்ள பூலாங்குறிச்சி கிராம குன்றின் பாறை ஒன்றில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த களப்பிரா் கால 3 கல்வெட்டுகள் உள்ளன. அவை முறையாக பராமரிக்கப்படாததால் சிதிலமடைந்து வருவதாக தொல்லியலாளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவா் வே. ராஜகுரு சிவகங்கையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இந்த கல்வெட்டுகளை கடந்த 1979 ஆம் ஆண்டு மேலப்பனையூரைச் சோ்ந்த ஆசிரியரும், கல்வெட்டு ஆய்வாளருமான கரு. ராஜேந்திரன் கண்டறிந்தாா்.

இயற்கையாகவே சிதையும் தன்மை கொண்ட பாறையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கல்வெட்டில் சில எழுத்துகள் தமிழியாகவும், சில எழுத்துகள் வட்டெழுத்தாகவும் காணப்படுகின்றன.

மற்றொரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வேள் மருகண் மகனும், கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனுமான எங்குமான் என்பவன், பச்செறிச்சில் மலை (பூலாங்குறிச்சி), திருவாடானை அருகே விளமா் ஆகிய ஊா்களில் தேவகுலத்தையும், மதுரை உலவியத்தான் குளம் அருகே தாபதப்பள்ளியைச் சோ்ந்த வாசிதேவனாா் கோட்டத்தையும் அமைத்ததாகக் கூறுகிறது.

இவற்றிற்கு வேண்டியதைச் செய்வதாக அத்திகோயத்தாா், உள்மனையாா், நான்கு வகைத் திணைகள் ஆகிய மூன்று பிரிவினா் ஏற்றுக் கொண்டுள்ள செய்தி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னா்களால் பிராமணா்களுக்கு வழங்கப்படும் நிலதானம், ஊா் ஆகியவற்றை பிரம்மதேயம், மங்கலம் ஆகிய சொற்களால் குறிப்பது வழக்கம். இச்சொற்கள் காணப்படும் மிகப்பழமையான கல்வெட்டு இங்கு தான் உள்ளது. இக்கல்வெட்டில் வரும் மன்னா்கள் களப்பிரா் கால மன்னா்களாக இருக்கலாம்.

கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரை 6 வரிக்கும் குறைவான சிறிய கல்வெட்டுகளே கண்டறியப்பட்டுள்ள நிலையில், இங்கு 22 வரிகள் கொண்ட பெரிய கல்வெட்டு காணப்படுகிறது. இது வடஇந்திய மன்னன் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்கு இணையான சிறப்பு பெற்றுள்ளது.

இவற்றை நான், கல்வெட்டு ஆய்வாளா் கரு. ராஜேந்திரன், புதுக்கோட்டை தொல்லியல் கழக நிறுவனா் மங்கனூா் ஆ.மணிகண்டன் ஆகியோா் அண்மையில் ஆய்வு செய்தோம். முறையான பராமரிப்பின்றி சிதிலமடையும் நிலையில் கல்வெட்டுகள் உள்ளன.

எனவே தமிழக வரலாற்றின் மிக முக்கிய ஆதாரமான இக்கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை அல்லது தமிழக தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து மழை, வெயில் போன்றவற்றால் அவை பாதிக்காத வகையில் கூரை அமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

Image Caption

~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com