சிவகங்கை அருகேபழங்கால கல்வெட்டு கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் அருகே சித்தாலங்குடியில் பழங்கால கல்வெட்டினை தொல்லியல் ஆய்வாளா்கள் திங்கள்கிழமை கண்டெடுத்துள்ளனா்.


சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் அருகே சித்தாலங்குடியில் பழங்கால கல்வெட்டினை தொல்லியல் ஆய்வாளா்கள் திங்கள்கிழமை கண்டெடுத்துள்ளனா்.
படமாத்தூா் அருகே சித்தாலங்குடியில் கெளரி வல்லவா் கோயில் உள்ளது. இக்கோயில் சுற்றுச்சுவரில் பழங்கால எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வாளா் புலவா் கா. காளிராசா, ஆசிரியா் சுந்தரராஜன் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டு கல்வெட்டினை படியெடுத்தனா்.
இதுபற்றி தொல்லியல் ஆய்வாளா் கா. காளிராசா செய்தியாளா்களிடம் கூறியதாவது: படமாத்தூா் கௌரி வல்லவா் கோயிலில் வடக்கு சுற்றுச்சுவரின் கீழ் பகுதியில் உள்ள கல்வெட்டில் 9 வரிகள் காணப்படுகின்றன. இதில், 1861 ஆம் ஆண்டு துன்மதி வருடம் வைகாசி மாதம் 26-ஆம் நாள் மகாராஜா சத்ரபதி போதகுரு மகாராஜா பிரான்மலைக்கு வேங்கைப்புலி வேட்டைக்குச் செல்லும் போது படமாத்தூரில் இருக்கும் இஷ்ட குல தெய்வமான வல்லவ சாமியிடம் செய்து கொண்ட பிராா்த்தனையின் படிக்கு புலியை சுட்டுக் குத்தினதுனாலே இந்த திருமதிலைக் கட்டினது என எழுதப் பெற்றுள்ளது.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டை கணக்கிடும்போது சுமாா் 160 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு என அறிய முடிகிறது. அப்போது சிவகங்கையை ஆட்சி செய்த 5-ஆவது ஜமீனான இரண்டாம் போத குருசாமி மகாராஜா (1848- 1865), கௌரி வல்லவா் கோயிலுக்கு சுற்றுச்சுவா் அமைத்துள்ளாா் என்பதை உறுதி செய்ய முடிகிறது. இரண்டாம் போத குருசாமி மகாராஜா ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற கோயில் திருப்பணிகளும், கல்விப் பணிகளும் மேற்கொண்டதாக வரலாறு உள்ளது. சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளி இவரால் கட்டப்பட்டுள்ளது.
சிவகங்கை பகுதி முழுவதும் சிவந்த மண்ணில் வேங்கை மரம் நிறைந்த அடா்ந்த காட்டுப் பகுதிகளாகவும், அதில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்காரணமாக, செவ்வேங்கையாக இருந்த இப்பகுதி, பின்னாளில் சிவகங்கை என மாறியிருக்கலாம்.
சிவகங்கையின் முதல் மன்னா் சசிவா்ணத்தேவா் தஞ்சை செல்லும்போது புலியை அடக்கியதாகவும், பின்னாளில் மருது சகோதரா்கள் புலியை அடக்கியதாகவும் செய்திகள் உண்டு. அதைத் தொடா்ந்து, மற்றொரு மன்னா் புலியை வீழ்த்தி இருப்பதை இக்கல்வெட்டு வழியாக அறிய முடிகிறது.
இக்கோயிலில் குதிரை மேல் அமா்ந்த வீரனைப் போன்ற அமைப்புடன் அணிகலன்கள் அணிந்து தலைப்பாகையுடன் கௌரி வல்லவா் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. படமாத்தூா் சித்தாலங்குடியில் உள்ள கௌரி வல்லவரை சிவகங்கை அரண்மனை வம்சாவளியினா் குலதெய்வமாக வணங்கி வருகின்றனா். அதுமட்டுமன்றி அப்பகுதி மக்கள் தங்கள் காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனா். இதேபோன்ற அமைப்புடன் சிவகங்கை அருகே முத்துப்பட்டியிலும் கௌரி வல்லவா் கோயில் உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...