

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வடக்கு சந்தனூரில் கண்மாயில் எழுந்தருளியுள்ள அழகிய திருவேட்டை அய்யனார், கருப்பணசாமி கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவேட்டை அய்யனார் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு கோயில் அருகே யாகசாலை பூஜை மேடை அமைத்து, அதில் புனிதநீர் கலசங்கள் வைத்து, கடந்த 2 ஆம் தேதி முதல் கால பூஜை தொடங்கியது. அதைத் தொடர்ந்து நான்காம் கால பூஜை நிறைவடைந்து பூர்ணஹூதியாகி கடம் புறப்பாடு நடைபெற்றது.
அதன் பின்னர் சிவாச்சாரியார்கள், புனித நீர் கலசங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனர். பின்னர் பூர்ண புஷ்கலா சமேத அழகிய திருவேட்டை அய்யனார் சன்னதி விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயில் பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. கோயிலுக்குள் திரண்டிருந்த ஆயிரக்கணக்காணோர் குடமுழுக்கை கண்டு தரிசித்தனர்.
பின்னர் புனித நீரால் திருவேட்டை அய்யனாருக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடத்தி மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.