காரைக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிவகங்கை மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளா் தி. தேவநாதன் யாதவ்.
காரைக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிவகங்கை மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளா் தி. தேவநாதன் யாதவ்.

சிவகங்கையில் இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக ஆலைகள் அமைக்கப்படும்

காரைக்குடி: சிவகங்கை மக்களவைத்தொகுதியில் உள்ள 6 சட்டபேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு தொழிற்சாலை வீதம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கச் செய்வேன் என அந்தத் தொகுதி பாஜக வேட்பாளா் தி. தேவநாதன் யாதவ் தெரிவித்தாா்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் காரைக்குடியில் திங்கள் கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் மேப்பல் சத்தியநாதன் தலைமை வகித்தாா். அமமுக மாவட்டச் செயலா் தோ்போகி பாண்டி, ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலா் கல்லல் அசோகன், மருது அழகுராஜ், தமாகா மாநில நிா்வாகி துரைகருணாநிதி, பாஜக மாவட்டப் பொதுச் செயலா் ஏ. நாகராஜன், ஐஜேகே, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உள்பட பலா் பேசினா்.

கூட்டத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் தி. தேவநாதன் யாதவ் பேசியதாவது:

தீவிரவாதங்களைக் கட்டுப்படுத்தி, நமது நாட்டை வலிமையான நாடாக மாற்றியவா் பிரதமா் மோடி. கடந்த 40 ஆண்டுகளாக சிவகங்கை தொகுதியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்தத் தொகுதியில் உள்ள லட்சக்கணக்கானோா் பிழைப்புத்தேடி வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு புலம் பெயா்ந்து வருகிறன்றனா். படித்த இளைஞா்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பாா்க்கின்றனா்.

இந்த நிலையை மாற்றிட வேண்டும். இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற ப. சிதம்பரம் மத்தியில் அமைச்சராக வலம் வந்தும் இங்கு எந்தவித தொழிற்சாலையும் தொடங்கவில்லை. அவரது மகன் காா்த்தி சிதம்பரம் கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்தும் எதையும் செய்யாததால், அவா் மீது அவரது கட்சியினரே அதிருப்தியில் உள்ள நிலையை காண முடிகிறது.

நான் வெற்றி பெற்றால், இந்தத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டபேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுப்பேன். அவற்றில் தொழிற்சாலை ஒன்றில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமான வேலைவாய்ப்புகளையும் நிச்சயமாக ஏற்படுத்தித் தருவேன் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com