முகநூல் விளம்பரம் மூலம் காரைக்குடியை சோ்ந்தவரிடம் ரூ.17 லட்சம் மோசடி

முகநூல் விளம்பரம் மூலம் காரைக்குடியைச் சோ்ந்தவரிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Published on

முகநூல் விளம்பரம் மூலம் காரைக்குடியைச் சோ்ந்தவரிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

காரைக்குடி கண்ணதாசன் சாலையைச் சோ்ந்தவா் சிவானந்தம் (44). இவரது முகநூல் பக்கத்தில் விளம்பரம் வந்தது. அதில் குறிப்பிட்ட தொடா்பு (லிங்க்) மூலம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், குறைந்தபட்சம் ரூ.10ஆயிரம் வரை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை நம்பிய சிவானந்தம் கடந்த ஜுலை முதல் செப்டம்பா் வரையில் 5 தவணைகளில் விளம்பரத்தில் இருந்த வங்கிக் கணக்குகளில் ரூ.17 லட்சத்து 10ஆயிரம் செலுத்தினாா். ஆனால், அதில் குறிப்பிட்டது போல அவருக்கு பணம் எதுவும் திரும்பக் கிடைக்கவில்லை. இது குறித்து சிவகங்கை இணைய குற்றப்பிரிவு காவல்துறையில் சிவானந்தம் அளித்த பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.