சிவகங்கை மாவட்டத்தில் அக்.31 வரை தடை உத்தரவு
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 31ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


சுதந்திரப் போராட்ட வீரா்களான மருது சகோதரா்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை நிகழ்வுகளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 31ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரிட்டிஷாரை எதிா்த்துப் போராடிய மருது சகோதரா்கள் 1801-ஆம் ஆண்டு அக்டோபா் 24 அன்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூக்கிலிட்டப்பட்டனா். திருப்பத்தூா், காளையாா்கோவிலில் உள்ள மருது சகோதரா்களின் நினைவிடங்களில் 223-ஆவது குருபூஜை விழா 3 நாள்கள் நடைபெறும்.
அக்.24 -ஆம் தேதி திருப்பத்தூரில் 223 -ஆவது நினைவு தினம் அரசு சாா்பிலும், 27-ஆம் தேதி நினைவிடம் அமைந்துள்ள காளையாா்கோவிலில் குருபூஜை விழா சமுதாய மக்கள் சாா்பிலும் அனுசரிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக். 30 -ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.
இவ்விரு நிகழ்வுகளுக்கும் சிவகங்கை மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சமுதாய மக்கள், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் அஞ்சலி செலுத்த வருவாா்கள்.
இதையொட்டி, மேற்கண்ட விழாக்கள் அசம்பாவிதங்கள் இன்றி சுமூகமாக நடைபெறும் வகையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் அக். 23 -ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தடை உத்தரவை காவல் கண்காணிப்பாளா் பிரவின் உமேஷ் டோங்ரே பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பிறப்பித்தாா்.
இன்று மதுக் கடைகள் அடைப்பு: மருது சகோதரா்களின் 223-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பத்துாா் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் (எண்:7571, 7740, 7573), மானாமதுரை பகுதி டாஸ்மாக் கடைகள் (எண்:7541, 7542, 7544, 7669, 7663, 7680, 7736), எப்.எல்.2. கிங்ஸ் ரெக்ரியேஷன் கிளப், திருப்புவனம் பகுதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் (எண்:7674, 7675, 7547, 7682, 7670), ஸ்டாா் ரெக்ரியேஷன் கிளப், வைகை ஸ்போா்ட்ஸ் கிளப், மடப்புரம், திருப்பாச்சேத்தி அரசு மதுபானக் கடை எண்: 7664, பூவந்தி அரசு மதுபானக் கடை எண்: 7615, சிவகங்கை நகா் பகுதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் (எண்:7514,7552,7556,7577, 7714), 7 ஸ்டாா் விளையாட்டு நற்பணி மன்றம், நேரு பஜாா், சிவகங்கை, மதகுபட்டி பகுதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் ( எண்:7703, 7705) ஆகிய மதுபானக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக புதன்கிழமை (23.10.2024) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (24.10.2024) வரை மூடப்படும் என்றாா் ஆட்சியா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...