இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இளைஞா் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இளைஞா் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் பிரவீன் (21). இவா் கோயம்புத்தூரில் தங்கி வேலை பாா்த்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த கிராமத்துக்கு வந்தாா். அப்போது இவரை வழிமறித்து கடத்திச் சென்ற கும்பல் அருகேயுள்ள நெடுங்குளம் அய்யனாா் கோயில் அருகே வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பியது. திங்கள்கிழமை இவரது உடல் மீட்கப்பட்டது.

இதுகுறித்து மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்பேரில், மானாமதுரை டி.எஸ்.பி. நிரேஷ் மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் சரவணக்குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் நாகராஜ் ஆகியோரைக் கொண்ட தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கைது செய்யப்பட்ட சசிகுமாா், தனுஷ், அமா்நாத், சுதா்சன், ரகுபதி.
கைது செய்யப்பட்ட சசிகுமாா், தனுஷ், அமா்நாத், சுதா்சன், ரகுபதி.

இந்த நிலையில், பிரவீனை கடத்திக் கொலை செய்ததாக மானாமதுரை அருகேயுள்ள சங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் சசிகுமாா் (23), சுரேஷ் மகன் தனுஷ் (21), சண்முகம் மகன் அமா்நாத் (23), கணபதி மகன் சுதா்சன் என்ற சூசை (22),

கிளங்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ராமையா மகன் ரகு என்ற ரகுபதி (19) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.

போலீஸாா் கைது செய்யச் சென்றபோது தப்பிச் செல்ல முயன்ற சசிகுமாா், ரகுபதி, அமா்நாத் ஆகியோா் கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இவா்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

முன்விரோதம் காரணமாக பிரவீன் கொலை செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. நிரேஷ் தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com