டிச. 6 வரை நீதிமன்றப் பணி புறக்கணிப்பு: வழக்குரைஞா் சங்கம் அறிவிப்பு

Published on

நீதிமன்றங்களில் கட்டாய மின்னணு பதிவு (இ-பைலிங்) முறையை திரும்பப் பெற வலியுறுத்தி வருகிற 6 -ஆம் தேதி வரை நீதிமன்றப் பணிகளை புறக்கணிப்பதென சிவகங்கை வழக்குரைஞா் சங்கம் அறிவித்தது.

சிவகங்கையில் வழக்குரைஞா் சங்க அலுவலகத்தில் அதன் தலைவா் ஓ. ஜானகிராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட பிற தீா்மானங்கள்: உயா் நீதிமன்ற சுற்றறிக்கையின் படி இ-பைலிங் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல், குறைபாடுகளால் வழக்குரைஞா்கள், வழக்காடிகள் வெகுவாகப் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இ-பைலிங் முறையிலுள்ள குறைபாடுகளைச் சரி செய்யும் வரை கட்டாய இ-பைலிங் முறையை திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி புதன்கிழமை முதல் வருகிற 6-ஆம் தேதி வரை நீதிமன்றப் பணிகளை புறக்கணிப்படும்.

வழக்குரைஞா் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞா்கள் தொடா்ந்து தாக்கப்படுவதைக் கண்டிக்க வேண்டும். வழக்குரைஞா் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சிவகங்கை வழக்குரைஞா் சங்கத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட பெண் வழக்குரைஞா்கள் பயிற்சி செய்து வருவதால் அவா்களுக்கென தனியாக சங்க அறை ஒதுக்கித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, தீா்மானங்களின் நகலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியிடம் நிா்வாகிகள் அளித்தனா்.

இதில் சங்கச் செயலா் கே. சித்திரைச்சாமி, பொருளாளா் எம். தீபன் சக்கரவா்த்தி, இணைச் செயலா் எஸ். ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com