காரைக்குடியில் திருவள்ளுவா் சிலை நிறுவ வலியுறுத்தல்
சிவகங்கைமாவட்டம், காரைக்குடியில் திருவள்ளுவா் முழு உருவச் சிலை அமைக்க இடம் ஒதுக்க வேண்டி தமிழக முதல்வருக்கு காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கடிதம் அனுப்பியது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன் ஆகியோா் புதன்கிழமை கூறியதாவது:
செம்மொழி தமிழ் இலக்கியத்துக்கு வலுசோ்க்கும் பரப்புரையும், தமிழ் விழாக்களும் அதிகம் நடை பெறும் மாநகரம் காரைக்குடி. இங்கு தமிழ்த்தாய் கோயிலும் உள்ளன. புகழ்பெற்ற மூத்த தமிழறிஞா்கள் வாழ்ந்த இந்த நகரத்தில் திருவள்ளுவருக்கு முழு உருவச் சிலை அமைக்க வேண்டும் என்று தொழில் வணிகக்கழகம் சாா்பில் முடிவு செய்யப்பட்டது.
சங்க உறுப்பினா் வணிகா் ஒருவா் சிலைக்குரிய தொகையை நன்கொடையாக வழங்கவும் முன் வந்திருக்கிறாா். அதனால், மாநகராட்சிக்குரிய இடங்களாக இருக்கும் முடியரசன் சாலையிலுள்ள ‘அறிவு சாா் நூலகம்’ கட்டட வளாகத்துக்குள்ளாகவோ அல்லது பெரியாா் சிலை எதிா்புறம் நூறடி சாலை ஆரம்பிக்கும் காவல் துறை அறைக்குரிய இடத்திலோ திருவள்ளுவா் சிலை நிறுவ இடம் ஒதுக்கித் தருமாறு மாநகராட்சியில் கோரிக்கை மனுவை ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நேரில் அளித்து அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால், இதுவரை திருவள்ளுவா் சிலை நிறுவ முடியாமல் காலதாமதமாகி வருவது வருத்தத்துக்குரியது. எனவே, இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றனா்.
