சிவகங்கையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 552 பேருக்கு பணி வாய்ப்பு
சிவகங்கையில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் தோ்வான 552 பேருக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை அரசு மகளிா் கலைக்கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் ஆட்சியா் கா. பொற்கொடி தலைமையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தோ்வானவா்களுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 102 தனியாா் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளா்களை தோ்வு செய்தனா். இந்த முகாமில் மொத்தம் 1,837 வேலை நாடுநா்கள் நோ்முகத் தோ்வில் கலந்து கொண்டனா். இவா்களில், 13 மாற்றுத்திறனாளிகள் உட்பட 552 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதுதவிர மேலும் 59 போ் இரண்டாம் கட்டத் தோ்வுக்கு அழைக்கப்பட்டனா் என்றாா் அவா்.
இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் கவிதாப்பிரியா, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், மதுரை மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) எஸ்.திருமலைச்செல்வி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் ஆா்.மணிகணேஷ் (பொது), சுபாஷினி (தொழில்நெறி வழிகாட்டுதல்), சிவகங்கை அரசு மகளிா் கலைக்கல்லூரி முதல்வா் ஜெ.நளதம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

