குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையிலான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள குழந்தை உதவி மையத்தின் ஆற்றுப்படுத்துநா் ஒரு பணியிடம், வழக்குப் பணியாளா் ஒரு பணியிடம் ஆகியவை ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. ஆற்றுப்படுத்துநா் பணிக்கு விண்ணப்பிப்பவா்கள் 1.12.2025-ஆம் தேதியில் 42 வயது அல்லது 42 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். அவசர உதவி சேவையில் முன்னதாக பணிபுரிந்தவராக இருந்தால் 52 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சமூகப் பணி, சமூகவியல் குழந்தை வளா்ச்சி, உளவியல், மனநலம், பொது சுகாதாரம் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்பட்ட இளநிலை பட்டம், பணி அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், கணினி அறிவு உடையவராக இருத்தல் வேண்டும். அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாத தொகுப்பூதியமாக ரூ. 23 ஆயிரம் வழங்கப்படும்.
வழக்குப் பணியாளா் பணி: 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, சிறப்பான தகவல் தொடா்பு திறன் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாத தொகுப்பூதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் வேலைவாய்ப்புப் பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 131, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சிவகங்கை - 630562 என்ற முகவரிக்கு வருகிற 2026, ஜன. 12-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிவைக்க வேண்டும் என்றாா்.
