இறந்தவரின் உடலை அடக்கம் செய்த ஆற்றைக் கடந்து செல்லும் பொதுமக்கள்
சிங்கம்புணரி அருகே இறந்தவரின் உடலை ஆற்று நீரைக் கடந்து மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். இதனால் இந்தப் பகுதியில் ஆற்றைக் கடக்க பாலம் கட்டித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள குமரப்பட்டி கிராமத்தில் சுமாா் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதி மதுரை- சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இந்தக் கிராம மக்களுக்கு சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பாலாற்றின் மறுகரையில் பொது மயானம் உள்ளது. இதனால், இறந்தவரின் உடலை பாலாற்றை கடந்துதான் கொண்டு சென்று அடக்கம் செய்கின்றனா். கடந்த மாதம் பெய்த மழையால் பாலாற்றில் தற்போது வரை இடுப்பு அளவு தண்ணீா் செல்கிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இறந்த சின்னையா என்ற முதியவரின் உடலை, பாலாற்றில் இடுப்பளவு தண்ணீரில் உறவினா்கள் மிகவும் சிரமத்துடன் மயானத்துக்கு எடுத்துச் சென்றனா். இதுகுறித்து பலமுறை மதுரை , சிவகங்கை மாவட்ட நிா்வாகங்களிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, பொது மயானத்துக்கு பாலாற்றை கடந்து செல்ல பாலம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

