இஸ்ரோ சாதனை: மாணவா்கள் பெருமிதம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சி.எம்.எஸ்.-03 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு பள்ளி மாணவா்கள் பலூன்களைப் பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் லெ. சொக்கலிங்கம் பேசியதாவது:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 தொலைத் தொடா்பு செயற்கைக் கோளை கடந்த வாரம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இது, அதிகபட்சம் 29,970 கி.மீ. தொலைவு கொண்ட புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப் பட்டது.
இதுவரை புவி வட்டச் சுற்றுப் பாதையில் ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் இதுதான் அதிகபட்ச எடை கொண்டது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்புச் செயல்பாடுகளை மேம்படுத்த இந்தச் செயற்கைக் கோள் உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.
இதையடுத்து, இந்தச் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள், தொழில்நுட்ப ஊழியா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் பள்ளி மாணவா்கள் வண்ண பலூன்களைப் பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஸ்ரீதா், முத்துலெட்சுமி ஆகியோா் செய்தனா்.
