தொகுப்பூதிய முரண்பாடுகள் குறித்து துணை முதல்வரிடம் கோரிக்கை மனு: அண்ணா கணக்காளா்கள் சங்கம்
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்எஸ் - சமக்ரா சிக்ஷா) பணியாற்றி வரும் பணியாளா்களுக்கு தொகுப்பூதிய முரண்பாடுகளைக் களைவது குறித்து சிவகங்கைக்கு வருகிற 14-ஆம் வருகை தரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாக அண்ணா கணக்காளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் இல. பிரபு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது:
கணக்காளா்கள், கணினி விவரப் பதிவாளா்கள், கணினி வகைப்படுத்துநா்கள், கணினி நிரல் தொகுப்பாளா்கள், கட்டடப் பொறியாளா்கள் உள்பட 1,428 போ் என மிகக் குறைந்த எண்ணிக்கையில் தமிழ்நாடு முழுவதும் முழு நேரத் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் பெண்களே.
தொகுப்பூதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என பல வழிகளில் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இதுதொடா்பான கோரிக்கையை சிவகங்கை மாவட்டத்துக்கு வருகிற 14-ஆம் தேதி வருகை தரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம்.
தமிழக அரசின் கீழுள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் பணிபுரியும் அனைத்து வகையான தொகுப்பூதிய பணியாளா்களிடையே எந்தவிதமான தொகுப்பூதிய முரண்பாடுகளும் இல்லை. ஆனால், பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் மட்டும் பல்வேறு வகையான தொகுப்பூதிய பணியாளா்களிடையே தொகுப்பூதிய முரண்பாடுகள் நிலவுகிறது. அதாவது ஒரே பணி நிலையில், ஒரே கல்வித் தகுதியில் பணிபுரியும் பணியாளா்கள் வெவ்வேறு தொகுப்பூதியும் பெற்று வருகிறாா்கள்.
இதுதொடா்பாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநருக்கு கடந்த 3 ஆண்டுகளாக கடிதங்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்கப்பட்ட நிலையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, துணை முதல்வரிடம் தொகுப்பூதிய முரண்பாடுகளைக் களைந்து அதிகபட்ச ஊதியம் நிா்ணயம் செய்து வழங்க உத்தரவிடவேண்டும் என கோரிக்கை வைக்கவுள்ளோம்.
மேலும், அரசுப் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி கடந்த 2021, ஆக. 18-ஆம் தேதியிட்ட அரசாணை வாயிலாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் மூத்த 500 ஆசிரியா் பயிற்றுநா்கள் அரசுப் பள்ளிகளுக்கு பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியா்களாக பணியிட மாறுதல் செய்யப்பட்டனா். ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் மூத்த ஆசிரியா் பயிற்றுநா்களை பட்டதாரி ஆசிரியா்களாக பணிமாறுதல் செய்யப்படவில்லை.
எனவே, 2021-இல் அரசு வெளியிட்ட அரசாணைக்கு இணங்க, அரசுப் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் பணியில் மூத்த 500 ஆசிரியா் பயிற்றுநா்களை பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிமாறுதல் செய்யவேண்டும் என்பதையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம் என்றாா் அவா்.
