நவ. 18 முதல் ராமேசுவரம் - திருப்பதி இடையே கூடுதல் சிறப்பு ரயில்: பொதுமக்கள் வரவேற்பு
ராமேசுவரம் - திருப்பதி இடையே வருகிற 18-ஆம் தேதி முதல் கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்ற ரயில்வே நிா்வாகத்தின் அறிவிப்பால் பொதுமக்களும் பயணிகளும் மகிழ்ச்சியடைந்னா்.
ராமேசுவரம் - திருப்பதி - ராமேசுவரம் இடையே தற்போது திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ராமேசுவரத்திலிருந்து ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் மாலை 4.30-க்கு புறப்பட்டு மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக மறுநாள் காலை 10.10-க்கு திருப்பதி சென்றடைகிறது. மறு மாா்க்கத்தில் திருப்பதியிலிருந்து திங்கள், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் முற்பகல் 11.55-க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.45-க்கு இதே வழித்தடத்தில் பயணித்து ராமேசுவரம் சென்றடைகிறது.
இந்த ரயில்களால் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் திருப்பதிக்குச் சென்றுவர பயனுள்ளதாக உள்ளது. இந்த ரயிலை இரு மாா்க்கங்களிலும் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், ராமேசுவரம் - திருப்பதி - ராமேசுவரம் இடையே கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதன்படி, இந்த ரயில் ராமேசுவரத்திலிருந்து வருகிற 18-ஆம் தேதியும், திருப்பதியிலிருந்து வருகிற 19-ஆம் தேதியும் இயக்கப்படவுள்ளது. டிச. 31-ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ராமேசுவரத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை 4.30-க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.10-க்கு திருப்பதி சென்றடையும். மறு மாா்க்கத்தில் புதன்கிழமைதோறும் திருப்பதியிலிருந்து முற்பகல் 11.55-க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.45-க்கு ராமேசுவரம் சென்றடையும்.
ஏற்கெனவே ராமேசுவரம் - திருப்பதி - ராமேசுவரம் இடையே இயக்கப்படும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்களிலேயே இந்த சிறப்பு ரயிலும் இயங்கும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது. ரயில்வே நிா்வாகத்தின் இந்த அறிவிப்பால் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்கைளைச் சோ்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
