கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டித் தரக் கோரி கிராம மக்கள் மனு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள கண்ணமங்களப்பட்டி கிராம மக்கள் தங்களுக்கு வழங்கிய வீட்டுமனையில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தர வேண்டுமென மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சிங்கம்புணரி அருகே உள்ள கண்ணமங்களப்பட்டி ஊராட்சியில் வசித்து வந்த 25 ஏழை குடும்பங்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிலம், வீடு கோரி பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டன. இதன் பேரில், ஏரியூா் பகுதியில் உள்ள எம். வலையப்பட்டி அம்மன் நகா் பகுதியில் 25 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதில் 10 குடும்பங்களுக்கு மட்டும் வீடுகள் கட்டித் தரப்பட்டன. எஞ்சிய 15 குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக புகாா் எழுந்தது.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பள்ளிக் குழந்தைகளுடன் திங்கள்கிழமை திரண்டு வந்த பொதுமக்கள், எஞ்சிய 15 குடும்பங்களுக்கும் ‘கலைஞரின் கனவு இல்ல’ திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தர வேண்டும். குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமெனக் கோரிக்கை மனு அளித்தனா்.
