
ஆகாஷ் டெலிஷன் மரணம்: 6 காவலா்கள் மீது கொலை வழக்கு; சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தகவல்
மானாமதுரையில் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் ஆகாஷ் டெலிஷன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளா் திலீபன் உள்ளிட்ட 6 காவலா்கள் மீது கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் - கோப்புப்படம்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் ஆகாஷ் டெலிஷன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளா் திலீபன் உள்ளிட்ட 6 காவலா்கள் மீது கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் டெலிஷன் (26). கடந்த மாா்ச் 5-ஆம் தேதி சீயோன் நகா் பகுதியில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதுதொடா்பாக ஆகாஷ் டெலிஷனை போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். பின்னா், அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த மாா்ச் 8-ஆம் தேதி உயிரிழந்தாா்.
ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் காவல் துறையினா் மீது சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினா் போராட்டங்களில் ஈடுபட்டதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையில், கடந்த ஜூன் 18- ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளா் திலீபன், உதவி ஆய்வாளா் குகன், காவலா்கள் மகேந்திரன், காளீஸ்வரன், தெய்வேந்திரன், பழனியப்பன் ஆகிய 6 போ் எதிரிகளாகச் சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு எதிராக கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆகாஷ் டெலிஷன் தாய் ஆனந்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 68 நாள்களுக்குப் பிறகு அதன் நகல் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகையின் 12 பக்கங்கள் மட்டுமே உள்ளன. விசாரணையின் போது, பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் முழுமையாக வழங்கப்படவில்லை. ஆகாஷ் டெலிஷனை அழைத்துச் சென்ற காவல் ஆய்வாளா் குமாரவேலையும் வழக்கில் சோ்க்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட 6 காவலா்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களின் நகல்களையும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





