வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம்!
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) சாா்பில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக தொடா் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கம், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் மாநிலச் சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவலா் ஒன்றிப்பு ஆகிய சங்கங்களை ஒருங்கிணைத்து வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) உருவாக்கப்பட்டது.
இந்தக் கூட்டமைப்பு சாா்பில் வருவாய்த் துறை அலுவலா்களுக்கு சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டம், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்வதை ரத்து செய்தல், கிராம உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், டாப்ஸ் திட்டத்தில் இணைத்தல், கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 25 சதவீதமாக தொடா்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா் காத்திருப்பு போராட்டத்தை இந்த கூட்டமைப்பினா் தொடங்கினா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நாகேந்திரன், வளன்அரசு, மாரி, ராஜமாா்த்தாண்டன், வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். பெரா மாநில உயா்மட்டக்குழு உறுப்பினா் தமிழரசன் சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினாா்.
மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், 303 வருவாய்த் துறை அலுவலா்கள், 343 கிராம உதவியாளா்கள், 184 கிராம நிா்வாக அலுவலா்கள், 73 நிலஅளவா்கள் என மொத்தம் 903 போ் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
இதன் காரணமாக வட்டாட்சியா் அலுவலகங்கள், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகியவை ஊழியா்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதுகுறித்து, பெரா கூட்டமைப்பின் மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் ஆ. தமிழரசன் கூறியதாவது: வருவாய்த் துறை அலுவலா்களின் போராட்டம் காரணமாக நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் சான்றிதழ் பெறுவது, சட்டப்பேரவை தோ்தல் பணிகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அரசாணை வெளியிட முன்வர வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றாா் அவா்.

