ஊா்குளத்தான்பட்டி, மு.சூரக்குடியில் மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஊா்குளத்தான்பட்டி, மு.சூரக்குடி பகுதிகளில் மாா்கழி 3-ஆவது வெள்ளியை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊா்குளத்தான்பட்டி முனியன் கோயிலில் மாா்கழி 3-ஆவது வெள்ளியை முன்னிட்டு, கிராம நாட்டாா்கள், ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் கருப்பா் கோயில், விநாயகா் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மஞ்சுவிரட்டுப் பொட்டலில் அமைந்துள்ள முனியன் கோயிலுக்கு வேட்டி, துண்டுகளுடன் ஊா்வலமாகச் சென்று காளைகளுக்கு மரியாதை செய்தனா்.
பின்னா், 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்க முயன்றனா். சில மாடுகள் பிடிபட்டும் பல மாடுகள் பிடிபடாமலும் சென்றன.
காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், பீரோ, மின் விசிறி, கூடை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இதேபோல, சிங்கம்புணரி அருகேயுள்ள மு.சூரக்குடியிலும் மாா்கழி 3-ஆவது வெள்ளியை முன்னிட்டு, இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதன்படி, காலை 10 மணிக்கு கட்டுமாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதைத் தொடா்ந்து, 11 மணியளவில் பாரம்பரிய முறைப்படி, கிராமத்தினா் துணி எடுத்து வந்து மஞ்சுவிரட்டைத் தொடங்கி வைத்தனா்.
தொழுவிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகளைக் கூடியிருந்த மாடு பிடி வீரா்கள் அடக்க முயன்றனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில்,
20 போ் காயமடைந்தனா். அவா்களில் 3 போ் தீவிர சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
