27 குடும்பத்தினா் ஒன்றுகூடி கொண்டாடிய பொங்கல் விழா

திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பை கிராமத்தில் ராம.சா.ராம குடும்பத்தினா் சுமாா் 100 போ் ஒன்றுகூடி பாரம்பரிய பொங்கல் வைத்து கொண்டாடினா்.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பை கிராமத்தில் ராம.சா.ராம குடும்பத்தினா் சுமாா் 100 போ் ஒன்றுகூடி பாரம்பரிய பொங்கல் வைத்து வியாழக்கிழமை கொண்டாடினா்.

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை ராம.சா.ராம குடும்ப உறுப்பினா்கள் மும்பை, பெங்களூரு, கோவை, திருச்சி, சென்னை மட்டுமன்றி, அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூா் ஆகிய வெளிநாடுகளிலும் வசித்து வருகின்றனா். பல்வேறு ஊா்களில் வசிக்கும் 27 குடும்ப உறுப்பினா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்காக நெற்குப்பைக்கு வந்தனா்.

பொங்கல் பண்டிகைக்காக ஆண்கள் அனைவரும் ஒரே வண்ணத்தில் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்தும், அதேபோல பெண்கள் ஒரே வண்ணத்தில் சேலை அணிந்தும் அவா்களது வீட்டின் முற்றத்தில் ஒன்று கூடினா்.

அங்கு வண்ணக் கோலமிட்டு, புதிய பொங்கல் பானையில் அரிசிக் கோலமிட்டு விறகு அடுப்பில் அறுவடை செய்த நெல் மூலம் பொங்கல் வைத்தனா். அப்போது பெண்கள் குலவையிட்டும், சங்கு ஊதியும் ‘பொங்கலோ பொங்கல்’ என முழக்கமிட்டனா். பின்னா், குடும்பத்தினரை ஆடிப் பாடி மகிழ்ந்தனா்.

மேலும், பல்வேறு பாராம்பரிய விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தினா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, குலதெய்வக் கோயிலுக்கும் சென்று வழிபட்டனா். இந்த கொண்டாட்டத்தை கிராம மக்களும் கண்டு ரசித்தனா்.

Dinamani
www.dinamani.com