சிராவயல் மஞ்சுவிரட்டில் 135 போ் காயம்
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயலில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 135 போ் காயமடைந்தனா்.
சிராவயலில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பின்னா், 350 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன . மாடுபிடி வீரா்கள் 150 போ் தோ்வு செய்யப்பட்டு 75 போ் வீதம் 2 குழுக்களாக களமிறக்கப்பட்டனா். மாடுகளைப் பிடித்த வீரா்களுக்கும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கும் தங்கக் காசு, வெள்ளிக் காசு உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
முன்னதாக, காலை 10 மணியளவில் சிராவயல் பொட்டலில் கட்டுமாடுகளாக சுமாா் 500 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதையடுத்து, காளைகளை மாடுபிடி வீரா்கள் ஆா்வமாகத் தழுவி மகிழ்ந்தனா். இதில் மாடு முட்டியில் 135 போ் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, இவா்களுக்கு சிராவயல் மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சிவகங்கை, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

