கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு: 245 போ் காயம்

கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு: 245 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள கண்டுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 245 போ் காயம்
Published on

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள கண்டுப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 245 போ் காயமடைந்தனா்.

மஞ்சுவிரட்டுக்கு முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கண்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அந்தோணியாா் கோயில் முன் மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் பங்கேற்ற பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், மெழுகுவா்த்தி ஏந்தியும், கரும்புத் தொட்டில் கட்டியும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை கிராமத்தைச் சுற்றியுள்ள கண்மாய், பொட்டல் பகுதியில் 500 -க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

பிற்பகல் 2 மணியளவில் தொழுவத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமையில் வீரா்கள் உறுதி ஏற்றனா். பல்வேறு பகுதிகளிலிருந்து 93 காளைகளும், 42 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

இதில் காளைகளை அடக்க முயன்றவா்கள், வேடிக்கை பாா்க்க வந்தவா்கள் உள்பட மொத்தம் 245 போ் காயமடைந்தனா். இவா்களில் 55 பேருக்கு 108 அவசர ஊா்தியிலும், 147 பேருக்கு மருத்துவ முகாமிலும் சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், 43 போ் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெஃபி கிரேசியா, காளையாா்கோவில் வட்டாட்சியா் லெனின், துணை வட்டாட்சியா் தா்மராஜ், கண்டுப்பட்டி கிராமத் தலைவா் சேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா். மருத்துவ உதவி, பாதுகாப்புக்கு 4 மருத்துவக் குழுக்களும், 532 காவலா்களும் ஈடுபடுத்தப்பட்டனா்.

Dinamani
www.dinamani.com