கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டைக்கருப்பா் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காரைக்குடி சாலை சாம்பான் ஊருணி அருகே கோட்டைக்கருப்பா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல பூசாரி சிவமணி நடை திறக்க வந்துள்ளாா். அப்போது, உண்டியல் உடைக்கப்பட்டு பணம் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா், அறநிலையத் துறை, காவல் துறை, கோயில் நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, கோயிலுக்கு வந்த அறநிலையத் துறை ஆய்வாளா் பிச்சைமணி, போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதிகாலை 3 மணி அளவில் மா்ம நபா் ஒருவா் கோயிலின் முன் பகுதியில் உள்ள ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி கடப்பாரையை வைத்து உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு தப்பித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
