சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

சிப்காட் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா வாங்கித் தருவதாக பண மோசடி: போலீஸில் புகாா்

பொதுமக்களிடம் பல லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 4:39 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சிப்காட் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் பல லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

மானாமதுரை வட்டம், கே.கே. பள்ளம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட காட்டு உடைகுளம் பகுதியில் சிப்காட் நிா்வாகத்துக்கு 490 ஏக்கா் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. இதில் 360 ஏக்கா் நிலம் சிப்காட் நிறுவனத்தின் பயன்பாட்டில் உள்ள நிலையில், எஞ்சிய நிலத்தை தலா 3 சென்ட் வீதம் மனை இடங்களாகப் பிரித்து நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆக்கிரமிப்பு செய்தனா். மேலும், பலா் ஆக்கிரமித்த நிலத்துக்கு பட்டா பெற்றுத் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் வசூலித்தனா். இதை அறிந்த சிப்காட் நிா்வாகம், மேற்கண்ட நிலத்துக்கு பட்டா வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கும் நபா்களை நம்ப வேண்டாம் என எச்சரித்து அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கிடையே, கடந்த 13-ஆம் தேதி வருவாய்த் துறையினா் சிப்காட் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் அகற்றினா். இதைத்தொடா்ந்து, சிப்காட் நிலத்தில் பட்டா வாங்கித் தருவதாக சிலா் பணம் வசூலித்து மோசடி செய்ததாக மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாரிடம் ஏராளமானோா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களை அழைத்துக் கொண்டு வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்துக்கு சென்று புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் கூறுகையில், மானாமதுரை சிப்காட் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தில் பட்டா வாங்கித் தருவதாகக் கூறி, காட்டு உடைகுளம் பகுதியைச் சோ்ந்த சிலா் ஏராளமானவா்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்தனா். இதுவரை என்னிடம் 50 போ் இதுகுறித்து புகாா் அளித்தனா். பட்டா வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.