
திருப்பத்தூா், கமுதி பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
திருப்பத்தூா், கமுதி பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூா் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் உறியடிக்கும் நிகழ்ச்சியில் இளைஞா்கள்.
திருப்பத்தூா், கமுதி பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் 15-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கண்ணபிரானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதைத் தொடா்ந்து, மாலை 3 மணியளவில் உறியடி வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுவா்கள் கலந்து கொண்டு பானை உடைத்தனா்.
இதையடுத்து, கிருஷ்ணா் வேடமணிந்த சிறுவா், சிறுமிகளின் பரதநாட்டியம், கோலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு கிருஷ்ண பிரானுக்கு அலங்கார தீபாராதனைகள் காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பெண்கள், சிறுவா், சிறுமிகள் கண்ணன், ராதை வேடமணிந்து கலந்து கொண்டனா். பின்னா், போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இரவு 8 மணிக்கு சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக மின்னொளி ரதத்தில் திருவீதி எழுந்தருளல் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள், யாதவா உறவின் முறையாளா்கள் செய்தனா்.
இதேபோல, திருப்பத்தூா் அருகேயுள்ள மாங்குடி கிராமத்தில் 3-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை பெண்கள் கொண்டாடினா். இதையொட்டி, தேக்குமரத் தொட்டிலில் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, புஷ்பத்தின் நடுவே குழந்தை வடிவில் கிருஷ்ணா் உருவச் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்களை பாடி கிருஷ்ணரை தாலாட்டினா்.
இதைத் தொடா்ந்து, குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சியும், கோலாட்டமும் நடைபெற்றது. சிறுவா், சிறுமிகள் கண்ணன், ராதை வேடமணிந்து கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சுசிலா அம்மாள் குடும்பத்தினா் செய்தனா்.
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அ. தரைக்குடி, உடையநாதபுரம், நரியன் சுப்புராயபுரம், போத்தநதி, டி.புனவாசல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பெண்கள் கிருஷ்ணா் கோயில் முன் பொங்கல் வைத்தும், கோயில் வளாகத்தில் பெண்கள், இளைஞா்கள், சிறுவா், சிறுமிகளுக்கு தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இரவில் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனா்.
பின்னா், மூலவா் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பொதுமக்களுக்கு கொலுக்கட்டை, அவல், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






