தேனி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு அரசு மானியம் வழங்கப்படுவதாக, எண்ணெய் எரிவாயு நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழுத் தலைவர் புதுராஜா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் கேஸ் ஏஜென்ஸியில் ரூ. 604.50-க்கு விற்பனை செய்யவேண்டிய சமையல் எரிவாயு சிலிண்டர், ரூ.632.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளுக்குச் சென்று சிலிண்டர் விநியோகம் செய்வதில்லை. வீட்டில் ஆள் இல்லை என்று ரசீதுகளை ரத்து செய்து விடுகின்றனர் என்று, பிச்சம்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் கூறியது: சமையல் எரிவாயு சிலிண்டரை அதிக விலைக்கு விற்கக் கூடாது. நாள் மற்றும் நேரம் நிர்ணயம் செய்து வாடிக்கையாளரின் வீட்டுக்குச் சென்று சிலிண்டர் விநியோகம் செய்யவேண்டும்.
பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக கேஸ் ஏஜென்ஸிகள் சார்பில் தெருவோரங்களில் பாதுகாப்பின்றி இருப்பு வைக்கப்படும் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் முகவர்கள் கூறியது: மத்திய அரசு சார்பில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான வைப்புத் தொகை ரூ.1,450 மற்றும் ரெகுலேட்டர் வாங்குவதற்கு ரூ. 150 மானியமாக வழங்கப்படுகிறது.
அரசு மானியத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெற விரும்பும் பொதுமக்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் என்பதற்கு, உள்ளாட்சி அமைப்பு சார்பில் வழங்கப்படும் சான்றிதழ், வட்டார வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட வழங்கல் அலுவலரிடம் பெற்ற அங்கீகாரக் கடிதம், குடும்ப அட்டை நகல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, வங்கிக் கணக்கு பாஸ் புத்தகம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கேஸ் முகவர்களிடம் விண்ணப்பிக்கலாம்.
சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் விட்டுக் கொடுப்போர் திட்டத்தின் கீழ், விட்டுக் கொடுப்போரது மானியம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு மாற்றி வழங்கப்படும். இது குறித்த தகவல், மானியத்தை விட்டுக் கொடுத்தவரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

