ஆண்டிபட்டி அருகே வரதராஜபுரம் கிராமத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை தங்களது சொந்த செலவில் ஓடையை தூர்வாரினர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ளது வரதராஜபுரம் கிராமம். இங்கு 1,200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் 90 சதவீதம் பேர் விவசாயிகளாகவும், விவசாயக் கூலிகளாகவும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழையின்றி கிராமத்தின் அருகாமையில் உள்ள அதிகாரி கண்மாய், பிச்சம்பட்டி கண்மாய் மற்றும் குளங்கள் பல ஆண்டுகளாக நிரம்பவில்லை.
நீர்வரத்திற்கான ராமக்கல் ஓடை, குமரிக்கல் ஓடை ஆகியவை ஆக்கிரமிப்பாலும் , முட்புதர்கள் மண்டி தூர்ந்து போய் இருந்தன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் கேள்விக்குறியானது.
இந்நிலையில் நீர்வரத்து ஓடைகளை தூர் வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுகி கொடுத்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் ஓடைக்கான இடத்தை முறைப்படி அளந்து கொடுத்தனர். வியாழக்கிழமை 45 அடி அகலத்தில் 3 கிமீ தூரத்திற்கு ஓடையை தூர்வாரி, கரையை பலப்படுத்தும் பணியை கிராம மக்கள் தங்கள் சொந்த செலவில் செய்து வருகின்றனர்.
ஓடை சுத்தமான பின், வட கிழக்கு பருவ மழை காலத்தில் தங்கு தடையின்றி தண்ணீர் சென்று கண்மாயை அடையும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜதானி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராமபாண்டியன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.