பெரியகுளம் அருகே பராமரிப்பின்றி காணப்படும் தீர்த்தத் தொட்டியினை சுத்தம் செய்து, அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகே தீர்த்தத் தொட்டி உள்ளது. இந்த தொட்டி சுமார் 400 வருடங்களுக்கு முன் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி கட்டப்பட்டது.
இத்தொட்டி சுமார் 50 அடி நீளமும், 30 அடி அகலமும், 8 அடி ஆழமும் கொண்டது. இத்தொட்டியின் அடியில் உள்ள துவாரம் வழியாக நீர் வரத்து உள்ளது. ஆனால் நீர் வரத்து எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை யாரும் கண்டறிய முடியவில்லை.
இதில் பெரும்பாலான மாதங்களில் தண்ணீர் எப்போது நிரம்பி காணப்படும். இப்பகுதி இளைஞர்களின் நீச்சல் குளமாக இந்த தொட்டி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்த்த தொட்டி கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த தொட்டியின்
ஓரத்தில் உள்ள கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.
மேலும் தொட்டியின் பின்புறம் உள்ள, மண்டபம் பெரும்பாலான இடங்களில் இடிந்து காணப்படுகிறது.
மேலும் தண்ணீரில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் சேர்ந்து மாசடைந்துள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. இதில் தேங்கியுள்ள குப்பைகளை தென்கரை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியகுளம் பகுதியில் உள்ள இளைஞர்கள் நீச்சல் பழகமுடியாமல் கிணறு மற்றும் குளங்களில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது. எனவே தீர்த்தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.