பெரியகுளம் பகுதியில் கரும்பு விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம் பகுதியில் கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தேவதானப்பட்டி, காமாட்சியம்மன்கோயில் பகுதியில் விளைந்துள்ள கரும்பு.
தேவதானப்பட்டி, காமாட்சியம்மன்கோயில் பகுதியில் விளைந்துள்ள கரும்பு.
Updated on
1 min read

பெரியகுளம் பகுதியில் கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, மூங்கிலணை காமாட்சியம்மன்கோயில் ஆகிய பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெல், வாழை மற்றும் கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு போதிய அளவு வடகிழக்குப் பருவமழை பெய்ததால் மஞ்சளாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இங்கிருந்து மூங்கிலணை காமாட்சியம்மன்கோயில் பகுதி பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடப்பட்டதால், கரும்பு அதிக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இந்த ஆண்டு கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

விவசாயி எ.ராமராஜ் கூறியது: காமாட்சியம்மன் கோயில் பகுதியைச் சுற்றி 100 ஏக்கருக்கும் மேல் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. கரும்பு விதைகள், நடவுக்கு பின் உரம், களைஎடுத்தல் மற்றும் மண்கட்டுதல், 6 முறை மருந்து தெளித்தல் என ஏக்கருக்கு ரூ 2.5 லட்சம் வரை செலவு செய்துள்ளோம்.

கடந்தாண்டு 10 கரும்புகள் கொண்ட கட்டு ரூ. 200 முதல் 250 வரை விற்பனையானது. இந்தாண்டு கரும்புகள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளதால் கட்டின் விலை ரூ.250 முதல் 300 வரை விற்பனையாகும் என எதிா்பாா்க்கிறோம்.

ஆண்டுதோறும் ஜப்பசி மாதத் தொடக்கத்தில் வெளியூா் வியாபாரிகள் காமாட்சியம்மன்கோயில் பகுதியில் முகாமிட்டு கரும்புக்கு விலைநிா்ணயம் செய்து முன் பணம் செலுத்துவாா்கள். நிகழாண்டில் கரோனா பொதுமுடக்கத்தால் வெளியூா் வியாபாரிகள் வரவில்லை.

தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசில் முழு கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திற்கு வழங்கப்படும் பொங்கல் பரிசில் தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோயில் பகுதியில் விளையும் கரும்பை வழங்க வேண்டும்.

இந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் கரும்பு அதிக சுவையுடன் இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கோயிலை சுற்றி மட்டுமே கரும்பு விளைவிக்கப்படுவதால் காமாட்சியம்மன் கரும்பு என அழைக்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com