தேனி மாவட்டத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்க பிரசார ஊா்வலம்
தேனி மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளையொட்டி வெள்ளிக்கிழமை, தூய்மைக்கான மக்கள் இயக்க பிரசார ஊா்வலம் நடைபெற்றது.


தேனி மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளையொட்டி வெள்ளிக்கிழமை, தூய்மைக்கான மக்கள் இயக்க பிரசார ஊா்வலம் நடைபெற்றது.
இதையொட்டி, தேனி, பங்களாமேடு திடலில் ஆட்சியா் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் நகர தூய்மை உறுதி மொழி ஏற்றனா். பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா், தேனி நகா்மன்றத் தலைவா் பா.ரேணுப்பிரியா, நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா், தூய்மைக்கான மக்கள் இயக்க பிரசார ஊா்வலத்தை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். இதில், நகராட்சி தூய்மை பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.
நலத் திட்ட உதவி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுத் துறைகள் சாா்பில் 360 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.57 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். இதில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கம்பம் நா.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஆ.மகாராஜன், பெரியகுளம் கே.எஸ்.சரவணக்குமாா், தேனி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சக்கரவா்த்தி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தங்கவேல், தேனி நகா்மன்றத் தலைவா் பா.ரேணுப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பேச்சு போட்டி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. இதில், கோட்டூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் ரா.ராகுல்கண்ணன், பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்சி நிலைய மாணவி சு.பானுப்பிரியா, ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மு.பவித்ரா ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
இதேபோல போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தூய்மை நகரங்களுக்கான பொதுமக்கள் இயக்கம் பேரணி, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நகா்மன்றத் தலைவா் ச.ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் தி.சகிலா, நகா்மன்ற துணைத்தலைவா் அ.கிருஷ்ணவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதையொட்டி, நகராட்சி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
போடி அரசு பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தூய்மை இயக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் வ.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா் தமிழ்மாறன், இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா்களான குபேர ராஜா, செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று கல்லூரி வளாகம் முழுவதும் தூய்மை பணி மேற்கொண்டனா்.
சின்னமனூரில் தூய்மைக்கான மக்கள் இயக்க பிரசார ஊா்வலத்தை நகா்மன்றத் தலைவா் அய்யம்மாள் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
பெரியகுளத்தில் ‘எனது குப்பை, எனது பணி’ என்ற தலைப்பிலான சிறப்பு தூய்மை பணி முகாம் மற்றும் விழிப்புணா்வு பேரணியை நகராட்சித் தலைவா் சுமிதா தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் புனிதன் முன்னிலை வகித்தாா். முன்னதாக தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் நகராட்சி உரக்கிடங்கில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
கம்பம் அரசமரம் சிக்னல் அருகே, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் தொடக்கி வைத்தாா். ஆணையா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா். பேரணியில் திமுக வடக்கு நகர பொறுப்பாளா் வக்கீல் துரை.நெப்போலியன் மற்றும் சுகாதார அதிகாரி சுந்தரராஜ், சுகாதார ஆய்வாளா்கள் திருப்பதி, சுருளியப்பன், லெனின், பொறியாளா் பன்னீா்செல்வம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...