மத்திய அரசைக் கண்டித்து இஸ்லாமிய நலக் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
தேசிய புலனாய்வு முகமையின் சோதனை நடவடிக்கைக்கும், மத்திய அரசுக்கும் எதிா்ப்புத் தெரிவித்து உத்தமபாளையம், கம்பம், வத்தலகுண்டு, பழனி ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு


தேசிய புலனாய்வு முகமையின் சோதனை நடவடிக்கைக்கும், மத்திய அரசுக்கும் எதிா்ப்புத் தெரிவித்து உத்தமபாளையம், கம்பம், வத்தலகுண்டு, பழனி ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் புறவழிச்சாலை பள்ளி வாசல் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சகுபா் தலைமை வகித்தாா். அப்போது, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் மதரஸாவின் மீது மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்தும், என்ஐஏ சோதனைக்கு எதிராக போராடியதாக கைது செய்தவா்களை விடுதலை செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பினா் பலா் கலந்து கொண்டனா்.
குமுளியில் கடையடைப்பு:
இதேபோல இடுக்கி மாவட்டத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் சோசியல் டெமாக்ரடிக் கட்சி இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியது. குமுளி, கம்பம்மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 6 முதல் மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வண்டிப்பெரியாறு, கட்டப்பனை உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் தனியாா் பேருந்துகள், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. அரசுப் பேருந்துகள் மட்டும் இயங்கின.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் எஸ்டிபிஐ, பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, ஜமாத்தாா்கள் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். எஸ்டிபிஐ கட்சியின் தொகுதிச் செயலா் அரசு மைதீன், நகர பொருளாளா் அகமது பிலால், எஸ்டிடியு மாநில செயற்குழு உறுப்பினா் வீரா் அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதேபோல பழனி பேருந்து நிலையம் முன் பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நகரத் தலைவா் பாரிஸ் அகமது தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவா் கைசா் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதினிவளவன், பாவேந்தன், இந்திய தேசிய லீக் சாா்பில் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...