கூடலூரில் முனியாண்டி கோயிலில் சித்திரைத் திருவிழா: தீ மிதித்து பக்தர்கள் பரவசம்
By DIN | Published On : 19th April 2022 12:52 PM | Last Updated : 19th April 2022 12:52 PM | அ+அ அ- |

கூடலூர் முனியாண்டி கோயில் சித்திரைத் திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்.
கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் முனியாண்டி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
தேனி மாவட்டம் கூடலூரில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ளது அருள்மிகு முனியாண்டி சாமி கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விழா கொண்டாட அனுமதிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் திருவிழாவில், முதல் நாளான செவ்வாய்க்கிழமை பெண் பக்தர்கள் முனியாண்டி சுவாமிக்கு பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர், ஆண் பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர்.
கோயில் அருகே தீ குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இரண்டாவது நாளாக புதன்கிழமை அதிகாலை பொங்கல் வைத்தும், மாவிளக்கும் எடுக்கின்றனர். மாலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து முல்லை பெரியாற்றில் ஆற்றில் கரைக்கின்றனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...