கம்பத்தில் கவுன்சிலர்களை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
By DIN | Published On : 13th June 2022 11:09 AM | Last Updated : 13th June 2022 11:09 AM | அ+அ அ- |

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி தூய்மை பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் தொந்தரவு செய்வதாக கூறி திங்கள்கிழமை காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்களாக 48 பேர், தனியார் ஒப்பந்த பணியாளர்களாக 143 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை தூய்மைப் பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் காலையில் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேலானவர்கள் திரண்டனர்.
தூய்மைப் பணியாளர்களை திடீரென்று இடமாற்றம் செய்வதை கண்டித்தும், தனியார் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காதது, நகரமன்ற உறுப்பினர்கள் அதிக வேலைப்பளு கொடுத்து தொந்தரவு செய்வது போன்றவைகளை கூறி கண்டித்து முழக்கமிட்டனர்.
தகவல் கிடைத்ததும் கம்பம் தெற்கு காவல் சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுகாதார அலுவலர் சுந்தரராஜன் கலந்து கொண்டார்.
ஆணையாளர் வெளியூரில் இருப்பதால் வந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும், தற்போது அவரவர் பழைய வார்டுகளிலையே தூய்மைப் பணிகளைச் செய்யலாம் எனவும், இடமாற்றம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்ப வேலைகளுக்குச் சென்றனர். தூய்மை பணியாளர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் பரபரப்பு ஏற்பட்டது.