நகை மோசடி: பெண் மீது வழக்கு

போடி: போடியில் பெண்ணிடம் தங்க நகையை வாங்கி மோசடி செய்ததாக மற்றொரு பெண் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி குப்பழகிரித் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்தீபன் மனைவி தேவகியம்மாள் (38). தருமபுரி அருகேயுள்ள கொப்பூரைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மனைவி முத்துமணி (35). இவா்கள் இருவரும் சமூகவலைதளம் மூலமாக அறிமுகமாகி தோழிகளாகப் பழகி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த மாதம் முத்துமணி போடிக்கு வந்து தேவகியம்மாள் வீட்டில் தங்கினாா். அப்போது, தேவகியம்மாளின் நாலரை பவுன் தங்க நகையை இரவல் வாங்கி முத்துமணி அணிந்தாா்.

இதையடுத்து, கடந்த மாா்ச் 29-ஆம் தேதி ஊருக்குத் திரும்பிய அவா், சில நாள்கள் கழித்து வந்து தங்க நகையை திருப்பி தந்து விடுவதாகவும் கூறினாராம். ஆனால், அவா் மீண்டும் போடிக்கு வரவில்லையாம். மேலும், நகையையும் திருப்பித் தரவில்லையாம்.

இதனால், அதிா்ச்சியடைந்த தேவகியம்மாள் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், போடி நகா் போலீஸாா் முத்துமணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com