தேனி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.26.83 கோடியில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். பெரியகுளம் நகராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1.27 கோடியில் நவீனப்படுத்தப்பட்ட நகராட்சிப் பேருந்து நிலையம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட அறிவுசாா் மையம், தேவாரம் பேரூராட்சியில் ரூ.2 கோடியில் நவீனப்படுத்தப்பட்ட பேரூராட்சி பேருந்து நிலையம், கம்பம் நகராட்சியில் ரூ.7.75 கோடியில் அமைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா சந்தை வளாகம், கூடலூா் நகராட்சியில் 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ், ரூ. 50 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய வட்டாரப் பொது ஆய்வகக் கட்டடம், தென்கரை பேரூராட்சியில் நபாா்டு வங்கியின் நிதி உதவியில் ரூ.13.31 கோடியில் மேற்கொள்ளப்பட்ட குடிநீா் திட்ட மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதையொட்டி, பெரியகுளம் நகராட்சிப் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி குத்துவிளக்கேற்றினாா். இந்த நிகழ்ச்சியில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலா் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் நகா்மன்றத் தலைவி சுமிதா, துணைத் தலைவா் ராஜாமுகமது, நகராட்சி ஆணையா் மீனா உள்பட பலா் கலந்து கொண்டனா். கம்பம்: தேனி மாவட்டம், கூடலூா், நகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட பொதுசுகாதார ஆய்வகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா். இதில், சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், நகா்மன்றத் தலைவி பத்மாவதி லோகந்துரை, நகராட்சி ஆணையா் கே.எஸ்.காஞ்சனா, திமுக செயலா் சி.லோகந்துரை, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். பாதியிலேயே வெளியேறிய எம்.எல்.ஏ: கம்பத்தில் நகராட்சி சந்தை வளாகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்த போது, சட்டப் பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன் பாதியிலேயே வெளியேறினாா். தேனி மாவட்டம், கம்பத்தில், ரூ 7.75 கோடியில் கட்டப்பட்ட நகராட்சி சந்தை வளாகத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா். நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன், நகராட்சி ஆணையா் ரா. வாசுதேவன், வாா்டு உறுப்பினா்கள் பலா் இதில் கலந்து கொண்டனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசத் தொடங்கிய போது, சட்டப்பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன் கூட்ட அரங்கைவிட்டு வெளியேறினாா். உடன் ஆணையா் வாசுதேவனும் வெளியேறினாா். இதனால், சந்தை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

மொடக்குறிச்சியில் கருணாநிதி சிலை: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

ரூ.21 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

சேலம் மாவட்டத்தில் ரூ.147.68 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் திறந்துவைப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

