முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 5339 கன அடியாக அதிகரித்தது. இதனால், அணையின் நீா்மட்டம் 130.45 அடியாக உயா்ந்தது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல, முல்லைப் பெரியாறு அணை, நீா்ப் பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. புதன்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 5339 கன அடி இருந்தது. இதனால், அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 1.55 அடி உயா்ந்து, தற்போது அணையின் நீா்மட்டம் 130.45 உள்ளது. அணையில் 4,802 மில்லியன் கனஅடி நீா் உள்ளது. அணையிலிருந்து சுரங்கப் பாதை வழியாக தமிழகத்துக்கு வினாடிக்கு 1311 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.
மழையளவு (மி.மீ): பெரியாறு அணை 33.8, தேக்கடி 33.8, கூடலூா்-4.6.

