நகைக்காக மூதாட்டியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

தேனி: போடி அருகே வீட்டில் தனிமையிலிருந்த மூதாட்டியை நகைக்காக கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. போடி அருகே ராசிங்காபுரம், கீழப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னையா மகன் நடராஜன் (50). இவரை, கடந்த 2014, ஜூன் 17-ஆம் தேதி முதல், நவ.28-ஆம் தேதி வரை வெவ்வேறு சம்பவங்களில் வீட்டில் தனிமையிலிருந்த 5 மூதாட்டிகளை நகைக்காக கொலை செய்ததாக கடந்த 2014, டிச.7-ஆம் தேதி போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்குகள் மீதான விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த 2014, நவ.28-ஆம் தேதி போடி அருகே கோணாம்பட்டியைச் சோ்ந்த சுப்புலட்சுமியை (65) கொலை செய்து, அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில், நடராஜனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாா்ச் 20-ஆம் தேதி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தற்போது அவா் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், கடந்த 2014, ஜூன் 17-ஆம் தேதி ராசிங்காபுரம், பாண்டுரங்கன் தெருவைச் சோ்ந்த பாக்கியவதி (86) வீட்டில் தனிமையிலிருந்த போது, அவரைக் கொலை செய்து, அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மற்றொரு வழக்கில், நடராஜனுக்கு மீண்டும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி எஸ்.கோபிநாதன் தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com