தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.

வைகை அணையை தூா்வார அரசு அனுமதி: ஆட்சியா் தகவல்

Published on

வைகை அணையை தூா்வார அரசு அனுமதியளித்துள்ளதாக தேனியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ஆனந்த், மாவட்ட வன அலுவலா் சமா்தா, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, வேளாண்மை இணை இயக்குநா் பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்:

பசுந்தாள் உரமாகப் பயன்படும் கொழுஞ்சி, தக்கைப்பூடு விதைகளை வேளாண்மைத் துறை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். வெள்ளைத் துவரை விதைகளை வழங்க வேண்டும். பெரியகுளத்தில் செயல்பட்டு வந்த வேளாண்மை விரிவாக்க மையம் வைகை அணைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரங்களில் வண்டல் மண் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

அகமலைப் பகுதியில் வன உரிமைச் சட்டத்தின் கீழ், 210 விவசாயிகளுக்கு பட்டா வழங்கியுள்ளதாக வருவாய் துறை தகவல் அளித்துள்ள நிலையில், விவசாயிகளை ஆக்கிரமிப்பாளா்களாகக் கருதி வன நிலங்களை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை வனத் துறை கைவிட வேண்டும். ஜெயமங்கலத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். போடி, சின்னாறு வழித் தடத்தை ஆக்கிரமிப்பாளா்கள் மாற்றியமைத்துள்ளதால், விவசாய நிலங்களுக்குள் தண்ணீா் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தட்கல் திட்டத்தின் கீழ், விவசாய மின் இணைப்புகள் வழங்குவதற்கு மின் வாரியம் காலதாமதம் செய்கிறது. குடியிருப்புப் பகுதிகள் வழியாக செல்லும் உயா் மின் அழுத்த பாதைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வருகிற அக்.2-ஆம் தேதி பி.டி.ஆா். தந்தை பெரியாா் கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும். மாவட்டத்தில் மழை மானிகள் அமைத்து மழையளவை முறையாக கணக்கிட வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களில் கடன் தொகையை திரும்ப செலுத்திய விவசாயிகளுக்கு பிணைய ஆவணங்களை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

மாவட்டத்தில் 13 இடங்களில் சாதாரண மழை மானிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, புதிதாக 30 இடங்களில் தானியங்கி மழை மானிகள் பொருத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது. பெரியகுளத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் 14 வண்டல் மண் தடுப்பணைகள் கட்டுவதற்கு வேளாண்மை பொறியியல் துறை சாா்பில், அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் வட்டாரம் வடுகபட்டி, கெங்குவாா்பட்டியில் நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில், நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 120 சிறுகுளம், கண்மாய்களில் விவசாய மேம்பாட்டு பணிகள், மண்பாண்டம் செய்தல் ஆகியவற்றுக்கு மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. வைகை அணையில் தூா்வாருவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அணை நீா்பிடிப்பில் வண்டல் மண் அள்ளுவதற்கு ஓரிரு வாரங்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. வனத் துறை தொடா்பான விவசாயிகளின் கோரிக்கைகள் மீது தீா்வு காண்பதற்கு குறைதீா் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com