மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வரதட்சிணை கேட்டு மனைவியை அடித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகள் கெளசல்யா (27). இவருக்கும், பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் வங்கி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் கெளதம் (34) என்பவருக்கும் கடந்த 2020 ஜனவரி 30-இல் திருமணம் நடைபெற்றது. கெளதம் பெரியகுளத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், அதே ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி கெளசல்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கெளதம் குடும்பத்தினா் செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
கெளசல்யாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பெரியகுளம் காவல் நிலையம், பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியரிடம் செல்வம் புகாா் அளித்தாா்.
இதன் மீது நடைபெற்ற விசாரணையில் கெளசல்யாவை கெளதம் வரதட்சிணை கேட்டு அடித்துக் கொலை செய்ததும், பின்னா் கெளசல்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதும் தெரிய வந்தது. கெளசல்யாவின் உடல் கூறாய்வு அறிக்கையிலும் அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இது குறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கெளதமை கைது செய்தனா்.
இந்த விசாரணை தேனி மாவட்ட பட்டியலினத்தோா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் கெளதமுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.6,000 அபராதம் விதித்து நீதிபதி ஜி.அனுராதா தீா்ப்பளித்தாா்.

