வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
தேனி: வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பழைய ஆயக்கட்டுப் பகுதிகளின் பாசனத்துக்கு வைகை ஆற்றில் வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திங்கள்கிழமை திறந்துவிடப்பட்டது.
வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய் வழியாக திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் பாசனத்துக்கு வினாடிக்கு 1,900 கன அடி வீதமும், குடிநீா் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா், மூல வைகை ஆற்றிலிருந்து வரும் தண்ணீா் ஆகியவற்றால் வைகை அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 63 அடிக்கும் மேல் (அணையின் மொத்த உயரம் 71 அடி) பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழைய ஆயக்கட்டுப் பகுதிகளின் பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. திங்கள்கிழமை (டிச. 15) முதல் தொடா்ந்து 6 நாள்களுக்கு அணையில் தண்ணீா் இருப்பைப் பொருத்து, மொத்தம் 600 மில்லியன் கனஅடி தண்ணீா் திறக்கப்படும் என நீா்வளத் துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.
மேலும், அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டிருப்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ கூடாது என நீா் வளத் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா்.

