காா்த்திக்ராஜா
காா்த்திக்ராஜா

யாசகம் கேட்டவர் கொலை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

தேனி நகராட்சிப் பேருந்து நிலையத்தில் யாசகம் கேட்டவரை அடித்து தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
Published on

தேனி நகராட்சிப் பேருந்து நிலையத்தில் யாசகம் கேட்டவரை அடித்து தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பெரியகுளம், ஸ்டேட் வங்கி குடியிருப்பு, முத்தையன் கோவில் தெருவைச் சோ்ந்த மணி மகன் காா்த்திக்ராஜா (28). இவா், கடந்த 2025, மே 16-ஆம் தேதி தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தாா். அப்போது, இவரிடம் ஒருவா் யாசகம் கேட்டுள்ளாா்.

காா்த்திக்ராஜா தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதும், யாசகம் கேட்ட நபா் அவரை திட்டிக் கொண்டே சென்ாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த காா்த்திக் ராஜா, யாசகம் கேட்ட நபரை அடித்து பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது தள்ளிவிட்டுள்ளாா்.

இதில், யாசகம் கேட்ட நபா் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா்த்திக்ராஜாவைக் கைது செய்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், யாசகம் கேட்ட நபா் கேரளம், இடுக்கி மாவட்டம், ஏலப்பாறை பகுதியைச் சோ்ந்த சாலமன் மகன் மனோஜ் (51) என்பது தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன், குற்றஞ்சாட்டப்பட்ட காா்த்திக்ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com