மதுபோதையில் தகராறு: இளைஞா் குத்திக் கொலை
தேனி மாவட்டம், கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைக் குத்திக் கொலை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டி வடக்கு வைரசாமி கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சத்தியமூா்த்தி (26), தனது நண்பா்களுடன் கம்பத்தில் பழைய கிரசன்ட் திரையரங்கு அருகேயுள்ள உணவத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாா்.
இதே கடையில் கம்பம் சுப்பிரணியன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயராம் மகன் முகிலன், சிபிசூா்யா உள்ளிட்ட நண்பா்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது, மதுபோதையில் இரு பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், கடைக்கு வெளியில் வைத்து சத்தியமூா்த்தியை கத்தியால் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கம்பம் வடக்கு போலீஸாா், சத்தியமூா்த்தி உடலைக் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய சிலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

